தோகைமயில் நடனமிட தூதுவளைக் கொடி அசைய
தென்றலெனும் பெண் அவளும் வந்தாள்!-நனி
தேனிசையைத் தான் சுமந்து வந்தாள்!
சுமந்து வந்தாள்!
பூங்குயில் இசை பொழிய பூமரங்கள் தலை அசைய
பொதிகை வளர் தென்றலுமே வந்தாள்!-நறும்
பூமணத்தைத் தான் சுமந்து வந்தாள்!
சுமந்து வந்தாள்!
மாமழை தான் பொழிய மான்கூட்டம் அதைரசிக்க
மங்கை அவள் தென்றலுமே வந்தாள்!-மந்த
மாருதமாய் மலைவெளியில் நின்றாள்!
வந்து நின்றாள்!
அருவி சலசலக்க ஆற்றுவெள்ளம் கலகலக்க
அமுதமெனத் தென்றலுமே வந்தாள்!-இயற்கை
அன்னையினைக் கண்டு உவகை கொண்டாள்!
உவகை கொண்டாள்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply