மண்ணிலே பொற்குவை கண்டான்!-உயர்

மானமே பெரிதென வாழ்ந்திடும் உழவன்!

கண்போல மண்ணையே காத்து!-அதன்

கருணையால் பூமியில் மாயங்கள் செய்வான்!

விண்ணையும் மண்ணையும் சேர்த்தே-தன்

வித்தையால் விந்தைகள் புரிந்திடும் தோழன்!

திண்மையால் தேசத்தைக் காத்து-என்றும்

உண்மையின் வழியிலே உழைப்பதும் அவனே!

பொழிகின்ற மழைநீரைச் சேர்த்து-முகப்

பொலிவுடன் சேற்றிலே மாட்டோடு உழன்று

செழுமை மிகு செந்நெல் விளைக்கும்-எங்கள்

செம்மன மாந்தரைப்போல் வேறு இலரே!

மனிதர்க்கு மட்டுமல்லாது-பிற

மற்றைய உயிர்கட்கும் உணவினைத் தந்து

கனிவோடு வாழ்ந்திடும் அன்பன்-அவர்

கதையினைச் சொல்வதே யாம் பெற்ற பேறு!

மழைவேண்டி நாளுமே நெஞ்சில்-அவர்

மனம்ஒன்றி வேண்டிடும் பாங்கினைக் கண்டு!

மழைமேகம் பொழிந்திட அமிழ்தே!-வையம்

வளமாகும் உயிர்களை வாழ்த்தியே நாளும்!

(கல்லிலே கலை வண்ணம் கண்டான்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *