மாங்குயில் கூவும் குரலோசை!
மன ஆறுதல் வழங்கும் குயிலோசை!
பாங்குடன் வாழும் மனிதர் நெஞ்சில்
பாசத்தைப் பொழியும் குயிலோசை! -இது
படைத்தவன் நடத்தும் இசையாகம்! -நல்ல
பண்புடையார்க்கே இது யோகம்!
காதலர் நெஞ்சில் கண்ணியம் வளர்க்கும்
கானமழையே குயிலோசை! -உள்ளம்
கனிந்திடவே எங்கும் தண்ணளி வழங்கும்
கருணைமழையே குயிலோசை! -இது
கடவுள் நடத்தும் இசையாகம்! -நெஞ்சில்
கனிவுடையார்க்கே இது யோகம்!
இனியவை எங்கும் நிகழ்ந்திட வேண்டி
இசைத்திடும் இசையே குயிலோசை!
இன்னல் களைந்து இன்பம் சேர்த்திடும்
இன்னிசை மழையே குயிலோசை! -இது
இறைவன் நடத்தும் இசையாகம்! -நல்
இயல்புடையார்க்கே இது யோகம்!
(தேவன் கோவில் மணி ஓசை-பாடல் மெட்டு)

Leave a Reply