கண்ணின் கருவிழி காத்திடும் இமையாய்
காத்திட இயற்கை நமதாகும்!
மண்ணில் வளமாய் வளர்ந்திடும் மரங்கள்
மனிதர்க்கு என்றும் உறவாகும்!
எண்ணம் உயர்வாய் இனியவை செய்திட
எல்லா உயிர்களும் உனை நாடும்!
பண்ணிட நற்செயல் பகலவன் போலே
பைந்தமிழ் அதுவே உனைப்பாடும்!
விண்ணில் வலம் வரும் வெய்யோன் கதிரே
வியனுலகிதற்கே உயிராகும்!
வெண்ணிலவதனின் தண்ணொளியதுவால்
மண்ணில் உறவுகள் உருவாகும்!
இன்னல் களையும் இதந்தரு இதயம்
எல்லா உயிர்க்கும் வரமாகும்!
இப்புவிமீதில் உழைத்திடும் கரங்கள்
எளியோர்தமக்கே உரமாகும்!

Leave a Reply