புன்னை மரம் பூச்சொரிய பூங்குருவி இசைபயில

பொன்னொளிரும் ஆதவனைக் கண்டேன்!-அந்தப்

பொன்னெழிலில் எனை மறந்து நின்றேன்!

மறந்து நின்றேன்!

தேக்கு மரம் தலை அசைய தென்றலது தோள் தழுவ

தேன்மழையில் உடல் நனைந்து நின்றேன்!-என்

தேகமெல்லாம் புது சுகத்தைக் கண்டேன்!

சுகத்தைக் கண்டேன்!

வேங்கை மலர் இதழ் விரிய வெய்யோனின் கதிர் ஒளிர

வெண்மேகம் குடைபிடிக்கக் கண்டேன்!-கொடும்

வெயிலினின்றும் நான் ஒதுங்கி நின்றேன்!

ஒதுங்கி நின்றேன்!

அருவிகள் பொழிந்திருக்க ஆகாயம் கருத்திருக்க

ஆனந்தம் நான் மிகவும் கொண்டேன்!-மேவும்

ஆசையதால் கண் மயங்கி நின்றேன்!

மயங்கி நின்றேன்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *