பூமியில் வீழ்ந்திடும் வான்துளி போலே

பொழிந்திடும் நன்மைகள் வையமிதில்!

சேர்ந்திடும் நலமே! செழித்திடும்  வளமே!

சீர்மிக மேவிடும் வாழ்வினிலே!

நீரது சுழல! நிலமது குளிர!

மேனியில் முகிழ்த்திடும் தாவரமே!

தாவரம் அதுவே வரம் அதுவாக!

தரணியில் எங்கும் செழுமையதே!

உலகுயிர் உய்த்திட உயிர்வளி தந்து

உயிர்நீரதுவும் உணவும் தந்து

உவந்தே உறைந்திட உறைவிடமாகி

உயிர்களைக்  காத்திடும் பூமிஇதே!

குளிரும் பனியும் கொடுவெயிலும்

கொட்டும் மழையும் புயலதுவும்

வெட்டும் மின்னல் இடியதையும்

கட்டுள் வைத்திடும் பூமிஇதே!

இயற்கைப் பேரிடர் எதுவரினும்

இடரது களையும் தன்மையினால்

இனிதே உயிர்களைக் காத்திலங்கி

இம்மையில் யாவர்க்கும் அன்னையதாம்!

தாயாய் விளங்கி தயையதுவால் 

தாரணி காக்கும் துணையதுவாய் 

சேயாய் நம்மைக் காத்தருளும் 

செவ்விய பூமியைப் போற்றிடுவோம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *