பூமியைப் போலே பொறுமை இருந்தால்
பொங்கிடும் இன்பம் வாழ்க்கையிலே!
சாமியே நமது பூமி என்றாகிட
சஞ்சலம் இல்லை வாழ்க்கையிலே!
உயிர்கள் வாழ்ந்திட உறைவிடமாகி
உய்த்திட உதவிகள் புரிவதனாலே
உன்னதமாக உலகோர் மனதில்
உயர்ந்தே இலங்கும் பூமியிதே!
மேனியை உழவால் மெதுவாய் நீவிட
பெய்திடும் உணவை அமுத மழையென!
நாணிடும் பெண்ணவள் நலமது பேணிட
நானிலம் மீதினில் விளைந்திடும் நலமே!
பூமியைத் தாயெனப் போற்றிடல் சுகமே!
புரிந்தே வாழ்ந்திட பொங்கிடும் வளமே!
நாமதன் பிள்ளை என்றிடும் போதில்!
நனிமிகு வாழ்க்கை நமக்கினி அதுவே!
பிற உயிர்க் காத்திடும் பெற்றிமையதனால்
பெருமைகள் சேர்த்திடும் பூமி இதே!
தனதுயிர்த் தந்தும் தரணியைக் காக்கும்
தகைமையினால் நம் சாமியிதே!

Leave a Reply