பூமியிதைத் தாயெனவே போற்றியே வாழ்ந்திருந்தோம்!

பொல்லாத மனத்தவர்தான் பூமியிதை அழிக்கவந்தார்!

உலகுயிர்க் காத்துமண்ணில் உவந்திடும் உயர்குணத்தால்

உன்மத்தர் உளம்மாறி ஓர்ந்திடுவ  தெந்நாளோ!

பொறுமை நிறைந்திலங்கி புவியினுக் கணிகலனாய்

ஒருமை உணர்வோடே உதவிடும் தாயவளாம்!

அகழ்ந்திடும் கொடியவர்தம் ஆணவம் தனைச் சகித்து

இகழ்ந்திடும் கொடியரையும் ஏற்றிடும் தாயவளாம்!

தாயவளின் சீதனங்கள் தரணியில் நிறைந்திருக்க

நேயமுடன் வேண்டிடவே நேர்ந்திடும் நற்கதியே!

அஞ்ஞானம் நிறைந்தவர்தம் ஆட்டுவிக்கும் வித்தையினை

விஞ்ஞானம் வளர்த்துலகில் வென்றிடுவாள் பூமியன்னை!

வாழும் அனைத்துயிரும் வளமுடனே வாழ்ந்திடவே

வற்றாத நற்பயனை வழங்கி மகிழ்ந்திடுவாள்!

காலம் மாறிடினும் கவலைகள் தீர்ந்திடவே

களி பேருவகையுடன் கருணை புரிந்திடுவாள்!

இன்னாத செய்தழியும் இழிமன மாந்தருக்கும்

இனியவையே பயக்கும் எங்கள் அன்னை பூமியிதே!

பூமியிதைப் போற்றிடவே புலர்ந்திடும் பொற்காலம்!

சாமியிதைக் கைதொழவே சஞ்சலங்கள் தீர்ந்திடுமே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *