பச்சை வண்ண மரங்கள் என்னைப் பாடச் சொன்னது!-அங்கே

பாடி வந்த பூங்குயில் தன் பாடல் மறந்தது!

உச்சி வெயில் எந்தனுக்குத் தென்றலானது!-அங்கே

ஓடும் நதி என் இசைக்குத் தாளமானது!

வான் உயர்ந்த வரைகள் எங்கும் இன்னிசை ஒலிக்கும்!-நல்ல

வண்டினங்கள் மெய்மறந்து என் கவி கேட்கும்!

தேன்தமிழின்சுவையாக தெள்ளமுதாக!-என்

செந்தமிழ்க் கவிதை இந்தச் செகத்தினில் பாயும்!

ஆர்ப்பரிக்கும் கடல் அலையை அடக்கிடுவேன் நான்!

ஆடிவரும் தென்றலுக்கு அடிபணிவேன் நான்!

நாற்புறமும் நல்லவரை வணங்கிடுவேன் நான்!

நல்ல மனம் அல்லோரை நசுக்கிடுவேன் நான்!

தீப்பிழம்பின் தணல் எந்தன் செந்தமிழ்க் கவிதை!

தீயவற்றைச் சுட்டெரித்துச் செய்திடும் புதுமை!

போர்முரசின் துணையோடு புறப்படு தோழா!

புவிமாந்தர் நலம் பேணி உழைத்திடு தோழா!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *