பறவைகளைப் பாருங்கள்!
பாடம் என்ன கேளுங்கள்!
வரவின்றி செலவுகள் செய்யும்
லாவகத்தைக் காணுங்கள்!
விடியலிலே விழித்திடுமே!
ஓய்வின்றி உழைத்திடுமே!
இரைதேடிப் பறந்திடுமே!
இசைபாடிக் களித்திடுமே!
மனிதரவர் துயரமதை
மாற்றிடுமே பறவைகளே!
இனியகீதம் தான்பாடி!
இன்பமதைச் சேர்த்திடுமே!
கூடுகட்டும் நுட்பமதோ!
கோடிபெறும் மனிதருக்கே!
ஏடுகளில் நாம்அறியா
இரகசியங்கள் எத்தனையோ!
பூச்சிகளைத் தான்உண்டு
காத்திடுமே தாவரமே!
பூக்களிலே மகரந்தம்
சேர்ப்பதுவும் ஓர்வரமே!
விதைகளதும் பரவிடவே
வேண்டியதைச் செய்திடுமே!
வியனுலகம் பயனுறவே
வித்தகமே புரிந்திடுமே!
பலஇனத்துப் பறவைகளும்
பழகிடுமே உறவுகளாய்!
பகைமைஏதும் இல்லாமல்
பகிர்ந்திடுமே வாழ்விடத்தை!
பிறர்வாழத் துணைபுரியும்
பெருமைமிகு பறவைகளே!
பிறவியிலே உயர்ந்தவையாம்!
அஃறினையே ஆனாலும்!
பறவைகளைப் பாருங்கள்!
பகிர்ந்துண்டு வாழுங்கள்!
பகுத்தறிவின் துணையாலே
பல்லுயிரைப் பேணுங்கள்!
ஆறறிவு மனிதாஉன்
ஆணவத்தை நீக்கிவிடு!
அடங்கியபின் பூமியிலே
உனக்கென்று எதுவும்இல்லை!
தோல்வியுறும் வேளையிலே!
துயரமதால் துவளாதே!
தொலைந்திடுமே துன்பமதே!
விளைந்திடுமே நன்மையுமே!
ஒருமுறைதான் வாழ்க்கையிலே
உற்றுப்பார்க்க பிறஉயிரை
உண்மையதும் விளங்கிடுமே!
உள்ளமதும் உயர்ந்திடுமே!!

Leave a Reply