ஆதவனை ஆதாரமாய்க்கொண்டு அண்டமிதில்
அனைத்துயிர்க் காத்துநிற்கும் அன்னை பூமியிது!
தீ, வளி, நிலம், நீர், வெளி என்னும் பூதமதால்
திக்கெட்டும் உயிர்காத்துத் திகழ்ந்திடும் பூமியிது!
ஐம்பெரும் பூதமதை அளவுடனே பேணி,
அகிலமிதில் உயிர்கட்கு அன்னையுமாய் ஆகி,
மொய்ம்புறம் தனில் எங்கும் முகிழ்த்திடும் தாவரத்தால்,
செய்திடும் நல்வரத்தால் சீர்மிகு பூமியிது!
வானென்றும் நிலமென்றும் நதிஎன்றும் கடலென்றும்
வண்டுலவும் சோலையதாய் வற்றாத நீரூற்றாய்
தேனாய்ப் பாலாய்த் தீஞ்சுவைக் கனிகளுமாய்த்
தேகமெங்கும் நிறைந்திலங்க தேவசுகம் தந்திடுவாள்!
பூமியின் உயிர்களையே போதரவாய்த் தான் அனைத்துப்
பொங்கிடும் நற்சுகத்தைப் பொழுதெல்லாம் தந்திடுவாள்!
சாமியே அவளென்று சரணாகதி அடைய
சங்கடங்கள் தீர்த்திடுவாள் சத்தியத்தின் மறுவடிவாய்!
அன்னையவள் அருமையினை அறியாதார் யாருளரே!
அன்னையவள் பெருமையினை உணராதார் வெகுசிலரே!
அன்னையவள் பொற்பதங்கள் பணிந்திடவே நற்கதியாம்!
அன்னையவள் கருணையதே அனைவருக்கும் பெருந்துணையாம்!

Leave a Reply