மரம்கொத்திப் பறவை எழுப்பிடும் ஓசை
மனதுக்கு இதமாச்சு!
மஞ்சள் மலர்கள் விரித்திடும் படுக்கை
உடலுக்கு சுகமாச்சு!
மழைவரும் முன்னே மயிலதன் ஆட்டம்
கண்ணுக்கு விருந்தாச்சு!
மழையதன் மகிமை மலர்ந்திடும் பசுமை
மன்பதை வளமாச்சு!
சிந்திய வியர்வை செம்மண்ணில் விழ
தேசம் செழிப்பாச்சு!
சிந்தனையில் நல் எண்ணம் தோன்றிட
நேயம் பிறந்தாச்சு!
வந்தனை செய்து வறியவர்க்குதவிட
வையம் மகிழ்வாச்சு!
வாழ்வினில் உண்மை நெறியதனைப் பேணிட
வானம் வசமாச்சு!
பொய்யது கலவா கவிதை புனைந்திட
பூமியில் நிலையாச்சு!
புன்னகையதுவே பொன்னகையாகிட
நல்லது நிகழ்வாச்சு!
இயற்கையின் வளத்தைக் காத்திட மண்ணில்
இன்பம் வந்தாச்சு!
இல்லை! இல்லை! துயர் இனி இல்லை!
எல்லாம் நலமாச்சு!
கண்ணில் கருணை தோன்றிட மனதில்
கவிதை உருவாச்சு!
கடமையைச் செய்து உரிமையைக் கோரிட
காலம் பதிலாச்சு!
உழைத்திட நிதமே! உயர்ந்தது வாழ்வே!
உள்ளம் தெளிவாச்சு!
உழன்றிடும் ஏழையர் வாழ்வினிலே ஒளி
பிறந்திட இருள் போச்சு!

Leave a Reply