எனக்கு ஒரு வரம் வேண்டும்!

உன்னைச் சிதைக்க நினைக்கும் பித்தர்கள்

உன் காலடியில் வந்து விழும் படியாய்

அவர்தம் சிந்தையை மாற்றிடும்

ஓர் அற்புத வரம் வேண்டும்!

பிரபஞ்சத் தோற்றம் முதல்

பிறர் வாழத் துணை நிற்கும்

பெருமை மிகு குணமே

பெண் உந்தன் பெற்றிமையாம்!

உந்தன் பண்புகளை

ஊரே அறிந்திருந்தும்

உன்மத்தம் கொண்டோர்தாம்

உனை அழிக்கப் பார்க்கின்றார்!

கல்லாதார் செய்தவறை

கற்றவர்கள் மறந்திடலாம்!

பொல்லாதார் செய்தவறை

பூமியினர் மறந்திடலாம்!

இல்லாதார் செய்தவறை

இம்மையிலே மறந்திடலாம்!

கற்றவரே தவறு செய்யின்

கடிதினிலே மறந்திடுமோ!

நம்மோடு முடிவதில்லை

நானிலத்தில் நனி வாழ்க்கை!

எதிர்காலத் தலைமுறையும்

இன்ப நிலை பெற வேண்டும்!

இதை எண்ணிச் செயல்பட்டால்

இயற்கையதைக் காத்திடுவார்!

இயற்கை அன்னை உன் அருளால்

எந்நாளும் நலம் பெறுவார்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *