உடலில் வலுவிருக்கு உள்ளமதில் துணிவிருக்கு!

உழவு செய்ய எருதிருக்கு பொன்னையா!-நம்ம

உழைப்பை நம்பி உலகிருக்கு பொன்னையா!

அய்யன் உழுது வந்த அஞ்சு குழி நிலம் இருக்கு!

அமுதாய் நீரூறும் அழகான கிணறிருக்கு!

கிணற்றைச் சுற்றிலுமே பசு மரங்கள் நெறஞ்சிருக்கு!

கெண்டை கெளுத்தி அதும் தண்ணீரில் வளர்ந்திருக்கு!

ஏத்தம் எறச்சிடவே எருதுகளின் துணையுடனே

எங்கும் பயிர் விளையும் பொன்னையா!-நம்ம

இடர்களதே தீர்ந்துவிடும் பொன்னையா!

வரப்பையெல்லாம் ஒசத்திக்கட்டி வயல் உழுது பயிர் வளர்த்து

வளமுடனே வாழ்ந்திருப்போம் பொன்னையா!-பிறர்

வாழ்த்திடவே வகை புரிவோம் பொன்னையா!

சேற்றில் தினம் உலைந்து செந்நெல்லும் விளைத்திடவே

மாற்றம் வரும் வாழ்க்கையிலே பொன்னையா!-அது

ஏற்றமதை விளைத்திடுமே பொன்னையா!

(கையிருக்குது காலிருக்குது முத்தையா-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *