ஐம்பெரும் பூதமதால் ஆனதே இந்த பூமி!
ஐம்பெரும் பூதமதால் ஆனதே மனித மேனி!
ஐம்பெரும் பூதமதைப் பேணிட அகிலமிதில்
ஆர்த்திடும் இயற்கையதே அவனியின் உயிர்காத்து!
வலிமை மிகக்கொண்டு வையமிதில் விளங்குவதால்
வாழ்த்தி நின்றோம் பூதமென்றே ஐம்பெரும் சக்திகளை!
நன்மை பல செய்து நாநிலத்தைக் காத்திடினும்
தீமையதும் செய்ய சிந்தை கலங்கிடுவோம்!
கண்ணுக்குப் புலனாகும் காரணத்தால் ஐந்தென்றோம்
காணாத ஒருபூதம் ககனமிதில் உண்டேயாம்!
மறைபொருளாய்த் தானிருந்து மகிமையோடிலங்குவதால்
மண்ணுயிர்க்கு அது பயக்கும் மாட்சிமிகப் பெரிதேயாம்!
அணு என்ற சொல்லாலே அழைத்திடவே சக்தியதை!
அணுகிடவும் கவனமுடன் ஆர்ப்பரிக்கும் பெருந்திறத்தால்!
முறையோடு கையாள முழுப்பயனும் தந்திடுமே!
மூச்சாக உலகுயிர்க்கு நற்கதியும் வந்திடுமே!
புவியெங்கும் அணுசக்திப் போற்றிப் பரவிடவே!
புதுமை பல கண்டுப் பூரித்துப் போனோமே!
கையாளும் முறையதனில் கவனம் சிதறிவிடின்
காட்டிடுமே கோபமதைக் காத்திடுவோம் தீவிரமாய்!

Leave a Reply