அழகான எழில் சூழ்ந்த மலைச்சாரலில்-உந்தன்
அருள் பொங்கும் முகம்தன்னை நான் காண்கிறேன்!
அமுதன்ன உயிர்நீரைத் தான்தந்திடும்-உந்தன்
அன்பிற்கு ஈடிங்கு இணையே இல்லை!
மழைமேகம் உன்மீது நடமாடிடும் -அந்த
மகத்தான தருணத்தில் நிலை மாறினேன்!
மாறாத உன் அழகில் தான் மயங்கியே-உந்தன்
மடிமீது தலைவைக்க உளம் நாடினேன்!
மலையென்றும் வனமென்றும் உன்மேனியில் -ஒரு
மாக்கோலம் உருவாக எழில் சூழ்ந்திடும்!
மழைபெய்து உன்மேனி நீர்சூழ்ந்திட -மண்ணில்
மனம்கவரும் உயிரினங்கள் தான் தோன்றிடும்!
கடல் வானும் கனிவாக உன்தோற்றமே -ஒரு
கருத்தான வடிவாக எழில் கூடுமே!
கலைமிக்க எழில்சோலை உனைச் சேர்ந்திட -எங்கும்
கண்கவரும் புதுக்கோலம் தான்மேவுமே!

Leave a Reply