குமரி மலைக் காடுகளின் செழுமையதைக் கண்டேன்!
கொஞ்சி விளையாடும் வண்ணப் பறவைகளைக் கண்டேன்!
விஞ்சி நிற்கும் அழகினிலே மெய்மறந்து நின்றேன்!
விண்மதியின் ஒளியினிலே வியப்படைந்து நின்றேன்! (குமரி)
வானுயர்ந்த மரங்களதன் வளமதையே கண்டேன்!
வண்டுகளோ இசைபாடி வட்டமிடக் கண்டேன்!
மேனியெலாம் பசுமையதே பொலிந்திடவே கண்டேன்!
மேதினியில் இயற்கையதன் மேன்மையினைக் கண்டேன்! (குமரி)
அருவியெலாம் ஆர்ப்பரிக்கும் அழகினையே கண்டேன்!
அமுதூறும் ஊற்றுடனே ஆறுகளைக் கண்டேன்!
அன்னை அவள் இயற்கை அதன் ஆறுதலைக் கண்டேன்!
அரவணைத்துத் தவம்புரியும் ஆளுமையைக் கண்டேன்! (குமரி)
செடிகொடிகள் பூத்துநிற்கும் சீர்மையினைக் கண்டேன்!
செங்காந்தள் மலர்களதன் சிறப்பினையே கண்டேன்!
சிந்தையதைக் கவர்ந்திடவே எனை இழந்து நின்றேன்!
தெம்மாங்கு இசையதுவில் நிலை மயங்கி நின்றேன்! (குமரி)

Leave a Reply