மண்ணிலே மழைபொழிய மங்களம் நிறைந்திடுமே!
மக்களும் உழவுசெய்ய செந்நெல்லும் விளைந்திடுமே!
கண்ணிலே கருணைவரக் களித்திடும் உயிர்களுமே!
காலமகள் துணையாலே செழித்திடும் பயிர்களுமே!
பொன்விளைய பூமியிலே பொலிந்திடும் எழிற்கோலம்!
பூமகளின் ஆதரவால் புலர்ந்திடும் எதிர்காலம்!
தானம் தவமதுவால் தரணியும் விளங்கிடுமே!
தாளாத ஊக்கமதால் தகைமை இலங்கிடுமே!
ஒப்புரவு ஓங்கிடவே உன்னதம் நிகழ்ந்திடுமே!
உண்மையதன் வழிநடக்க உலகம் மகிழ்ந்திடுமே!
முப்பொழுதும் நலம்நினைய தப்பிதமும் மறைந்திடுமே!
முகமலர் அலர்ந்திடவே நகையதும் நிறைந்திடுமே!
சாதியம் ஒழிந்திடவே சமத்துவம் தழைத்திடுமே!
சன்மார்க்க நெறியதுவும் தரணியில் நிலைத்திடுமே!
நீதி நெறிவழியில் நீநிலம் திளைத்திடுமே!
நிம்மதி அதுபரவ நெஞ்சமும் களித்திடுமே!

Leave a Reply