வான்மேகம் கருணையினால் சீர்மேவும்!
வாராத இன்பம் இங்கு தோதாகும்!
கோடானு கோடிசுகம் தானாகத் தேடிவரும்!
நாள்தோறும் நன்மை எய்தலாம்!
கண்ணிலே அன்பும் உண்டு!
கனிவும் உண்டு! காதல் உண்டு!
மண்ணிலே வாழும் உயிர்
தன்னைக் காக்கும் தியாகம் உண்டு!
உள்ளத்தில் நேசம் உண்டு!
ஒன்றாகும் பாசம் உண்டு!
ஊராரும் போற்றும் வண்ணம்
சீராட்டும் நெஞ்சம் உண்டு!
நேராத நிம்மதியும் நேராதோ!
ஏரோட்டும் எங்கள் வாழ்வு தேறாதோ!
கருவுற்ற பெண்ணைப் போலே
கண் மயங்கும் நெல்லம்மா!
கழனியெல்லாம் எழில் கொஞ்சும்
காரிகையே சொல்லம்மா!
உடலிலே வலிமை உண்டு!
உன் ஆசை என்னம்மா!
உயிர்களுக்கே உணவாகும்
உனதருமை அன்னம்மா!
நேராத நிம்மதியும் நேராதோ!
ஏரோட்டும் எங்கள் வாழ்வு தேறாதோ!
தன்மானம் தனை இழந்து
தறி கெட்டு நெறி மறந்து
தரணியிலே வாழ்தல் கண்டால்
தக்காரும் உனை இகழ்வார்!
பாராளும் தலைவன் ஏது!
பண்பாடும் கவிஞன் ஏது!
உழவதுவும் இல்லை என்றால்
உலகினிலே அமைதி ஏது!
நேராத நிம்மதியும் நேராதோ!
ஏரோட்டும் எங்கள் வாழ்வு தேறாதோ!
வான்மேகம் கருணையினால் சீர்மேவும்!
வாராத இன்பம் இங்கு தோதாகும்!
கோடானு கோடிசுகம் தானாகத் தேடிவரும்!
நாள்தோறும் நன்மை எய்தலாம்!
(ஆறோடும் மண்ணில் எங்கும்-பாடல் மெட்டு).

Leave a Reply