மண்ணிலே பொன் விளைப்பான் விவசாயி!

மண்ணிலே பொன் எடுப்பான் உழைப்பாளி!

மண்ணிலே வீடமைப்பான் தொழிலாளி!

மண்ணிலே வனம் வளர்ப்பான் படைப்பாளி!

விவசாயி! உழைப்பாளி!

தொழிலாளி! படைப்பாளி!

மண் உழுது விதை விதைத்து நீர் பாய்ச்ச

மண்மாதா பொன் கொழிப்பாள் மகிமையதால்!

மாநிலத்து மக்களெல்லாம் பசியாற

மனமுவந்தே உணவளிப்பாள் மகிழ்வுடனே!

மண்ணை அகழ்ந்திடவே அனுதினமும்

மனமிரங்கி அருளிடுவாள் பொன்னதுவே!

உடல் வியர்வை சுவை அதனை உணர்ந்தவளாய்

உளமுவந்து வழங்கிடுவாள் பொன் அதையே!

மண்ணிலே சுவரெடுத்து வீடுகட்டி

மாளிகை கோட்டை என்றே அமைத்திடுவார்!

மழை வெயில் தாக்காமல் உயிர் காத்து

மாட்சிமை புரிந்திடுவாள் மண்மாதா!

மண்ணிலே விதை விதைத்து செடி வளர்த்து

மண்ணிலே அதை ஊன்றி மரம் வளர்க்க

மரங்கள் ஒன்றிணைந்தே வனமாக

மாயங்கள் செய்திடுவான் படைப்பாளி!

மண்ணிலே பொன் விளைப்பான் விவசாயி!

மண்ணிலே பொன் எடுப்பான் உழைப்பாளி!

மண்ணிலே வீடமைப்பான் தொழிலாளி!

மண்ணிலே வனம் வளர்ப்பான் படைப்பாளி!

விவசாயி! உழைப்பாளி!

தொழிலாளி! படைப்பாளி!

(கடவுள் என்னும் முதலாளி-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *