நானிலமே உன் சேவைகளை நான்

என்னென்று பாராட்டுவேன்!-இங்கு

வாழும் உயிர் காத்திடவே நான்

உன்னிடம் மன்றாடினேன்!

மரம் செடி விலங்கெனவே

மக்களும் பறவைகளும்

மண்ணிலே தான் காக்கும்

மாட்சிமை என் சொல்ல!

மழையதும் தான் தந்து

மலையிடைத் தேக்கி வைத்து

அனைவர்க்கும் வழங்கி நிற்கும்

அன்னை மனம் என்னென்பேன்!

உயிர்க் காற்றைத் தான் அளித்து

உயிர் நீரும் உணவதையும்

உறைவிடமும் உடையதுவும்

உவந்தளிக்கும் பாங்கென்பேன்!

நானிலமே உன் சேவைகளை நான்

என்னென்று பாராட்டுவேன்!-இங்கு

வாழும் உயிர் காத்திடவே நான்

உன்னிடம் மன்றாடினேன்!

ஆணவத்தின் உருவாக

ஆடிநிற்கும் அறிவிலிகள்!

அளவற்ற ஆசையினால்

அன்னை உடல் நோவதுவோ!

இயற்கை வளங்களையே

இதயமில் கொடுங்கோலர்!

இல்லை என்றாக்கிடவோ!

இது தகுமோ! முறையோ!

நானிலமே உன் சேவைகளை நான்

என்னென்று பாராட்டுவேன்!-இங்கு

வாழும் உயிர் காத்திடவே நான்

உன்னிடம் மன்றாடினேன்!

(ஆண்டவனே உன் பாதங்களை-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *