கானகம் வாழும் சிறுத்தையும் புலியும்
தோழர்கள் எமக்கே யார் அறிவார்!
காட்டினில் உறையும் மாந்தர் எமக்கே
சோதனையே இந்த மானிடர்தான்!
காலம் காலமாய் இயற்கையில் இயைந்தே
களித்திருந்தோம் நாம் வனமதிலே!
பாழாய்ப்போன மானிடராலே
வீணானது எம் உறைவிடமே!
தேயிலை காபி தென்னை வளர்த்திட
தேகம் அதையே சிதைக்கின்றார்!
சாலைகள் சுரங்கம் அணைகள் அமைத்திட
சகட்டு மேனிக்கு அழிக்கின்றார்!
மலையினில் வாழ்ந்தும் மாட்சிமையில்லா
மானிடரவரால் இழிநிலையே!
மாறிட அவர்தம் மனமதுவே மண்ணில்
மாறிடுமோ எம் துயர்நிலையே!
எவ்வுயிர் தம்மையும் தம்முயிராக
எண்ணி வாழும் இயல்பதுவே!
இருந்திட பூமி தழைத்திடுமே!-இங்கு
இனிமையும் வளமையும் நிலைத்திடுமே!

Leave a Reply