மண்மீது மரம் நமக்கு வரமே அன்றோ!-அதை

மனம் மாறி அழித்திடுதல் கொடுமை அன்றோ!

கண் போலக் காப்பதுவே மரம் அல்லவோ!-அதைக்

கணப்பொழுதில் குலைத்திடுதல் சாபமல்லவோ! (மண்மீது)

காடுகளின் சேவையதும் மாறுவதுண்டோ!-அதன்

கனிவான செயல் எதுவும் மீறுவதுண்டோ!

மன்பதைக்கு ஆதாரம் இயற்கை அல்லவோ!-அதை

மதிக்காமல் சிதைப்பதுமே பாவமல்லவோ! (மண்மீது)

உயிர்க்காற்றை வழங்குவதில் பஞ்சமில்லையே!

உயிர் நீரைத் தருவதிலும் வஞ்சமில்லையே!

உவந்தளிக்கும் சேவைகளோ கொஞ்சமில்லையே!

உளம் மாறி உருக்குலைக்க அஞ்சவில்லையே! (மண்மீது)

கண் போல உயிர்களையே காத்திருந்தேன்!-பல

கரம் கொண்டு மண்ணுலகைப் போர்த்திருந்தேன்!

என் குடும்பம் என்றெண்ணி இனிதிருந்தேன்!-அந்த

இதயமில்லா மனிதர் கண்டு அதிர்ந்துவிட்டேன்! (மண்மீது)

(கண்ணும் கண்ணும் பேசியதும்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *