மண்ணுயிர் மகிழ்ந்தன மழையாலே!
மணமது கமழ்ந்தது மலராலே!
பொன்னுலகலர்ந்தது பொலிவாலே!-அங்கு
பொங்கிடும் கதிரவன் ஒளியாலே!-(மண்ணுயிர்)
காலையில் நான் ஒரு கனவு கண்டேன்!-அதைக்
கண்களில் நிறுத்திடக் கனிவு கொண்டேன்!
வாழையும் தென்னையும் வளர்ந்திருக்கும்!-அங்கே
வயல்வெளியில் நெல் விளைந்திருக்கும்!
சோலையில் மலர்கள் மலர்ந்திருக்க!-அதை
சொர்க்கம் என்றே நான் நினைத்திருந்தேன்!-(மண்ணுயிர்)
மூங்கில் குழலாய் இசைத்திருக்க!-அங்கே
மொய்த்திடும் வண்டுகள் இசை கூட்ட!
வேங்கை மரங்கள் மலர் சொரிய!-அந்த
விந்தையில் எனை நான் மறந்துவிட்டேன்!-(மண்ணுயிர்))
ஏரி குளங்கள் நிறைந்திருக்க!-வயல்
ஏர் உழும் உழவர் உழுதிருக்க!
ஊர்வலம் போகும் பறவைகள் கண்டு
உளம் உவந்தேன் நான் எனை மறந்தேன்!-(மண்ணுயிர்))
(மலர்கள் மலர்ந்தன பனியாலே-பாடல் மெட்டு)

Leave a Reply