வண்ணம் நிறை மரம் வனப்பு மிஞ்சிடும்
மின்னிடும் சித்திரச் சோலையடி!
தென்னாட்டில் எல்லோரும்
தொழுது நிற்போம் நாளுமதே!
மணக்கும் சந்தனம் மஞ்சள் கடம்புடன்
மஞ்சனத்தியுமே கொஞ்சிக் குலவிட!
மாநிலத்தோர் போற்றி நிற்கும்
மாட்சிமை மிக்க சோலையடி!
அகில் அயினி அழிஞ்சி என்று
அரச மரமும் ஆத்துப் பூவரசும்
அறிஞரெல்லாம் வாழ்த்தி நிற்கும்
அழகு கொஞ்சும் சோலையடி!
மண்ணை உழுது பொன் விளைக்கும்
மானம் மிகு உழவரெல்லாம்
மாமரமும் மகிழமதால்
மனம் உவக்கும் சோலையடி!
தென்றல் தவழும் தீங்கனி மரங்கள்
தித்திக்கும் நாவல் நெல்லியுமாய்
தீந்தமிழ்த் தேனிசை வழங்கிடவே
தேவதை வாழ்ந்திடும் சோலையடி!
மழையைத் தழுவி மரங்களெல்லாம்
மண்ணில் நீரைத் தேக்கிடவே
மன்பதையே செழித்திடவே
மாயம் செய்யும் சோலையடி!
உலகுயிர்கள் உயிர்த்திடவே
உயிர்நீரும் உணவதையும்
உவந்தளித்து உபசரிக்கும்
உணர்வில் கலந்த சோலையடி!
சோலைகள் செய்திடும் சேவை கணக்கிட
சொல்லிட வார்த்தை போதாதே!
நாளும் அவைகளைக் காத்து வளர்த்திட
நன்மையதே நாட்டில் மேவிடுமே!
(சின்ன சின்ன இழைப் பின்னி பின்னி வர-பாடல் மெட்டு)

Leave a Reply