வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன்
வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே!
தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென்
தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே!
புவியினுக்குப் பொலிவினையே கூட்டிடுவாய்!-நனி
கவிதை இன்பம் உள்ளத்திலே ஊட்டிடுவாய்!
பொங்கிவரும் அலைகளையே காட்டிடுவாய்!-எங்கும்
மங்காத ஒளி தீபம் ஏற்றிடுவாய்!
தங்கம் நிகர் வண்ணமுடை வெண்ணிலவே!-நின்
தண் எழிலில் மயங்கி நின்றேன் வெண்ணிலவே!
தரணியிலே உயிர்களெல்லாம் வெண்ணிலவே!-நின்
தண்மதியால் தழைக்குதிங்கே வெண்ணிலவே!
பொன் எழிலைப் பூமியிலே பொன் நிலவே!-நீ
பூசிடுவாய் ஆசையுடன் பொன் நிலவே!
புதுமைகளைப் புகுத்திடுவாய் பொன் நிலவே!-பெரும்
புரட்சியையும் செய்திடுவாய் பொன் நிலவே!
வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன்
வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே!
தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென்
தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே!
(காண வந்த காட்சியென்ன-பாடல் மெட்டு)

Leave a Reply