வகைவகையாய் வளர்ந்திருக்க வளமுடனே மரமே!
நகையதுவாய் விளங்கிநிற்கும் நாட்டினிற்கு வனமே!
பெய்யும்மழையைப் பிடித்துவைத்துப் பெரும்பயனைத் தருமே!
பேணிஅதைக் காத்துவிடில் பெருகிடும் நல்வளமே!
மூன்றில்ஒரு பாகம்மண்ணில் முளைத்திட தாவரமே!
மும்மாரி மண்மீது பொழிந்திட நல்வரமே!
உயிர்களதன் உயிர்மூச்சாம் உயிர்வளியைத் தருமே!
உயிர்கள்விடும் விடைக்காற்றை உயிர் மூச்சாய்ப் பெறுமே!
மண்வளத்தைக் காப்பதனால் மன்பதையில் வளமே!
மாறிடவே சூழலது மக்களுக்கு நலமே!
வனம்உயிரைத் தான்சுமக்க வையமெங்கும் வளமே!
வளம்பெருக மாட்சியுடன் வாழ்த்திடுமே ஜெகமே!
பூவும்காயும் கனியும்தர பூமியிலே செழிப்பே!
பூத்திடவே எங்கணுமே பொங்கிடுமே களிப்பே!
பிறக்கும்போது குழந்தையதன் தொட்டிலாகப் பலனே!
இறக்கும்போதும் சுமந்துசெல்லக் கட்டிலாக நலனே!
உறுதியுடன் வீடுகட்ட உவந்தளித்த பிறகே
உணவதனைச் சமைத்திடவே உறுதுணையாய் விறகே!
பலவகையாய் உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் மரமே!
பாசமுடன் வளர்த்திட நல்பண்புகளும் வருமே!

Leave a Reply