நீரின்றி அமையாது உலகென்றார் நெறிமுறையார்!
நீரதுவே முதலுயிரின் இடமென்பார் அறிவியலார்!
நீரதனின் அருமையினை அறிந்திலரே உலகியலார்!
நீரதுவே உலகுயிரின் உயிர்த்துளியாம் அறிந்திடுவீர்!
பூமியிதின் பெரும்பகுதி நீரதுவே ஆனாலும்!
பூதலத்தார் இழிசெயலால் பொல்லாங்கு நேர்கிறதே!
சாமியதைத் தான்வேண்டித் தவிக்கின்றார் நீருக்காய்!
தந்துதவும் வான்மழையைப் பழிக்கின்றார் மாந்தருமே!
உலகில் உய்த்திருக்கும் உயிர்கட்கு அமிழ்தமென!
உயர்ந்தோர் தொழ விளங்கும் உயிர் நீர் மழையேயாம்!
விசும்பின் துளியாக வியனுலகைக் காத்து இங்கே
பசுமை நிறைத்திடுமே மாரியதன் கொடையதுவால்!
மன்பதையில் மாட்சிமிகு காவியங்கள் தோன்றிடவே!
மழையதுவே மண் கலந்து மாயங்கள் செய்கிறதே!
மனம் கவரும் சோலைகளும்! மணம் கமழும் மலர்களுமாய்!
மாட்சிமை நேர்ந்திடுமே மழையதனின் மகிமையினால்!
வையம் காத்து உயர் வள்ளலாய் விளங்கி நிற்கும்!
வான்மழையைப் போற்றிடிலோ வாராது துயரெதுவும்!
முகில்தந்தை பூமிஅன்னை மோகத்தில் தான்மயங்க
முளைத்தனவே எழில் கொஞ்சும் வனங்கள் இம் மண்ணகத்தே!
இயற்கை செழித்திருக்க எங்கும் வளமையதே!
இன்பம் நிறைந்திடவே இன்னல் மறைந்திடுமே!
இயற்கையை வெல்ல எண்ணும் இறுமாப்புக் கொண்டோர்தாம்
செயற்கையின் அடிமைகளாய்ச் சிதலந்தான் அடைகின்றார்!
இயற்கையைப் போற்ற மண்ணில் இன்பம் விளைந்திடுமே!
இயற்கையைக் காக்க எங்கும் இனிமை நிறைந்திடுமே!
இயற்கையே எல்லாமென்று எண்ணி இருந்துவிடில்
இம்மையில் எப்பொழுதும் ஏற்றம் நிலவிடுமே!
இயற்கையின் மகிமையினை அறிந்துமே சிலரேஇங்கு
எள்ளளவும் கருணையின்றி இன்னல் விளைக்கின்றார்!
தன்னலமே பெரிதென்று தருக்கித் திரியுமவர்
மண்ணுலகைப் பாழ்படுத்த மார்தட்டி அலைகின்றார்!
கல்வியிலாப் பலரிங்கேக் கருத்தறியும் நிலையிழந்தார்!
கண்விற்றுச் சித்திரந்தான் விலை பேசி நிற்கின்றார்!
பொல்லாப் பதரவர்தாம் பூமியிலே மிகுந்தமையால்
எல்லாம் இழக்கும் நிலை இன்றெமக்கு வந்ததுவோ!
நிலம்நீர் தீவளி வெளிஎன்று நிலவிஎங்கும்
நீனிலத்தைக் காத்திடுமாம் ஐம்பெரும் பூதங்கள்!
இவை ஐந்தில் ஓர்மூலம் இல்லையென்று ஆனாலும்
இருந்திடுமோ உயிரினங்கள் இப்புவிதனில் விளங்கி!
ஆதலினால் நம்முன்னோர் ஐந்து பஞ்சபூதங்களை
அடிபணிந்து தொழுதுநின்றார் அவனியின் நலம்வேண்டி!
இவைஐந்தும் சமன்செய்ய இலங்கிடுமே நலவாழ்வு!
இதில்ஒன்று சமன்பிறழ விளைந்திடுமே துயரதுவே!
விண்ணின்று துளியிறங்கி மண்ணில் தவழ்ந்தோடி!
அறுகளாய் ஏரிகளாய் அணைகளிலே கட்டுண்டு!
இறுதியிலே கடல் கடந்து இப்புவியில் நிரம்பி எங்கும்!
இன்னுயிர்க் காத்து நிற்கும் இதந்தரு தண்ணீர் தானே!
நீரதுவும் நானிலத்தின் நேர்த்திமிகு கொடையேயன்றோ!
நீரதுவும் மாநிலத்தின் நேர்த்திமிகு உருவேயன்றோ!
நீரதுவும் அவனியிதில் உயிர்காக்கும் மருந்தேயன்றோ!
நீரதனைக் காத்துவிடில் நேர்ந்திடுமே உயர்வேயன்றோ!
ஆகையினால் மானிடரே அகமதிலே உறுதி கொள்வோம்!
ஆருயிராய் விளங்கி நிற்கும் நீரதனை நேசிப்போம்!
அகிலமிதைக் காத்து நிற்கும் நீரதனை யாசிப்போம்!
அனைவர்க்கும் அருமருந்தாம் நீரதனைப் பூசிப்போம்!

Leave a Reply