அனைத்து உயிர்களின் வாழ்விற்கும்

அடித்தளமாய் விளங்குவது நீயே!

அவர்தம் உயிர்க் காற்றாய்,

உணவாய், உடையாய், உறைவிடமாய்

உலகியல் வாழ்வில்

உயர்வுக்கு ஆதாரமாய்!

உயிர்கள்தம் தேவைக்கு

உயரிய துணையாய்!

எல்லாமாகி எங்கும் நிறைந்த

இயற்கையே உந்தன்

ஈடில்லா கருணை

எத்துணை! எத்துணை!

எல்லைகளற்றது!

உயிருக்கு உயிராய்!

உயிருக்கும் மேலாய்!

உயிர்கள் உய்ய

உதவியே என்றும்

உயர்ந்தே விளங்கும்

உயரிய இயற்கை!

உயிர்கள் உய்த்திட

உன் துணை வேண்டும்!

உன்னைப் போற்றிடில்

உயர்வதுவாகும்!

உன் நிலை தாழ்ந்திடில்

உயிர்வதையே யாம்!

மண்ணிலும் விண்ணிலும்

மாக்கடல் முழுமையும்

எண்ணிலடங்கா

இயல்பிலே உன் உரு

காத்திடின் காத்திடும்!

கண்போல் உயிர்களை!

காயம் செய்திடின்

கடலாய்ச் சீறிடும்!

அன்னையே உந்தன்

அடிகளே சரணம்!

அனைத்துயிர்க் காத்து

அருள்புரி தாயே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *