மழையதுவாய் மண் வீழ்ந்து
வனமதிலே ஓய்வெடுத்து
ஊற்றாய்ப் பெருக்கெடுத்து
ஓடையாய் உருமாறி
சலசலப்பாய்க் கானகத்தே
சந்தக் கவிபாடி!
மண்ணகத்தே உயிர்கட்கு
மாமருந்தாய் விளங்கிநிற்கும்
தண்ணீராய் ஓர் வடிவம்!
தரணியதன் உயிர்நாடி!
ஆறாய் நதியாய்
அணைகளிலே கட்டுண்டு
எரியென்றும் குளமென்றும்
ஈரநிலம் கடந்து
கடலதிலே சங்கமிக்கும்
கருணை பொழி நீராய்
உலகத்து முதல் உயிர்க்கு
உயிர் கொடுத்த தண்ணீரே!
உலகத்து உயிர்கட்கு
உயிர்நீரே தண்ணீராம்!
பூமியிலே மூன்று பங்கு
நீராய் நிறைந்திடினும்
புவியினர்க்கு உயிர் நீரோ
போதாதே எந்நாளும்!
நீரதனைப் பூசித்தால்
நேர்ந்திடுமே நற்சுகமே!
நிலமகளை யாசித்தால்
நிகழ்ந்திடுமே நற்கதியே!

Leave a Reply