ஓ இயற்கை அன்னையே!

உன்னுடைய படைப்புக்களிலேயே

உன்னதமான கானகத்தின்

ஊடே நான் நடந்து செல்கையில்

அங்கே ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்கள்

என் மீது மஞ்சள் மலர் தூவி

எனக்கு வரவேற்பிதழ் வாசித்தன!

நீ நளினமாக நடந்து செல்கையில் தோன்றும் தென்றல்

மூங்கிலிடை மோதி இசைமழை பொழிந்தது!

மலர்நாடும் வண்டுகளின் ரீங்காரமும்

மனம் கவர் புள்ளினங்களின் குரலோசையும்

வாழ்த்துப்பாடின!

வண்ண வண்ண மலர்களும்

பல்லுருவில் மரங்களும்

சல சலக்கும் சிற்றோடை

சதிராடும் மந்திகளும்

காண்போரைக் கண் மயக்கும்

கவித்துவத்தைத் தூண்டிவிடும்!

நீ உருவாக்கிய கோடானு கோடி உயிர்களுள்

என்னையும் ஒன்றாக்கி

இத்தகு அழகையெல்லாம்

நான் காணப் படைத்தனையே!

என்னவென்பேன் உன் கருணை!

என் இதயம் விம்முதம்மா!

அம்மா நீ என் முன் வரவேண்டும்!

உன் மடி மீது தலை வைத்து

மலர் முகத்தைக் கண்ணுற்று

ஆனந்தக் களிப்பையெல்லாம்

அழுகையினால் காட்டிடுவேன்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *