ஓ இயற்கை அன்னையே!
உன்னைக் காண்பதற்காய்
மலை முகடுகளிலும்
மரங்கள் நிறை வனங்களிலும்
புல் மொட்டை வெளிகளிலும்
அலைந்து திரிந்திருந்தேன்!
அப்புறம்தான் தெரிந்துகொண்டேன்!
நீ இந்தப் பிரபஞ்சமெங்கும்
வியாபித்திருக்கும் விஸ்வரூபினி என்று!
வான் வெளியாய் மலைத் தொடராய்
வளர்ந்து நிற்கும் காடுகளாய்
வண்டினமாய்ப் புள்ளினமாய்
வனம் திரியும் விலங்குகளாய்
வண்ண மலர்ச் செறிவாய்
வானவில்லின் பொன்நிறமாய்
கத்தும் கடலலையாய்க்
களித்து நிற்கும் மனிதர்களாய்
காயாய்க் கனியாய்
கனியிடைத் தீஞ்சுவையாய்
மண்ணிலே நெல் மணியாய்
மண்ணிடைவாழ் நுண்ணுயிராய்
எங்கும் நிறைந்திருக்கும்
இயற்கையுந்தன் இயல்புகளை
எண்ணிடவே இன்பமன்றோ!
எழுதிடவோ யுகம் போறா!
என்னவென்பேன் உன் பெருமை!
என் வாழ்வே உன் கருணை!

Leave a Reply