மனிதா! மனிதா! மாறிவிடு!-பிற

மனிதரை மண்ணில் வாழ விடு!

அறியா மாந்தர் செய்யும் தவறை

அன்பால் நீயும் திருத்திவிடு!

குறைகள் இல்லா மனிதர் யார்?

குணமே நிறைந்த மனிதர் யார்?

குணமும் குறையும் இருந்துவிட்டாலும்

குணமே கூடிட வேண்டிடுவோம்!

பூமியில் வாழும் மரங்களைப் பார்!

பொறுமை அவற்றின் குணமதைப் பார்!

பொசுக்கும் வெயிலில் நிழலாய் அமையும்

புண்ணியம் யாரே செய்திடுவார்?

மண்ணில் வீழ்ந்திடும் மழைத்துளியே

மண்ணுயிர்க்கெல்லாம் ஆதாரம்!

மழையது முறையாய் இல்லையென்றால்

மண்ணுக்கு நேர்ந்திடும் சேதாரம்!

மழையது பெருகிட மரம் வேண்டும்!

மரங்கள் நிறைந்த வனம் வேண்டும்!

வனமது காத்திட மண்வளமே!

வையம் எங்கும் வளம் சேரும்!

பிறருக்கு உதவிடும் குணம் இருந்தால்

பெருமைகள் உன்னைத் தேடி வரும்!

பிறப்பது பூமியில் ஒரு முறையே!

சிறப்பாய் நீ அதை வாழ்ந்துவிடு!

இன்னல் இடும்பை என்பதெல்லாம்

யாவர்க்கும் இங்கு பொதுவாகும்!

இனியவை எண்ணி செயல்படவே

இன்பம் நமக்கு உறவாகும்!

துயரம் கண்டு துவளாதே!

துன்பம் வரினும் தளராதே!

உயர்வது ஒன்றே லட்சியமாய்

உளமதில் ஊக்கம் கொண்டுவிடு!

பிறந்த குடும்பம் காத்திடுவாய்!

பெற்றவர் போற்றிட வாழ்ந்திடுவாய்!

உற்றவர் மனதில் உயர்ந்திடுவாய்!

உலகம் உன்னைப் பாடிடவே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *