வானவெளி வீதியிலே நீந்திவரும் கோள்களுள்ளே!
வாழும் உயிர் காத்திருக்கும் வளம் மிகு பூமிஇதே!
கோடானு கோடியதாய்க் கோள்களும் இருந்திடவே!
வாடாது உயிர்காக்கும் வண்ணமிகு பூமிஇதே!
பாடிவரும் தென்றலுமாய்ப் பசுமை வனங்களுமாய்
மாசில்லா மண்வளமாய் மாறாத பூமிஇதே!
தன்மடியில் தவழ்ந்திருக்கும் தாவரமும் உயிரினமும்
தழைத்தே செழித்தடவே தந்துதவும் பூமிஇதே!
அலைந்திடும் மறிகடலும் அரவணைக்கும் உயிர்களுமே
அவனியில் நலம் நிறைய உயிர்த்திருக்கும் பூமிஇதே!
அன்பே அருமருந்தாய் ஆன்றோர் திளைத்திருக்கும்
அறியாமை இருளகற்றும் ஆன்மீக பூமிஇதே!
பூமியதன் பொறையுடைமை புரியா மாந்தருமே
புரிந்திடும் இழிசெயலால் நெகிழ்ந்திடும் பூமிஇதே!
அத்துணை உயிர்களுக்கும் அடித்தளமாய் இருந்து
ஆதாரமாய் விளங்கும் அன்னை இந்த பூமிஇதே!
பூமியிதைக் காத்திடுதல் புவியினர் நம் கடமை!
பூமியிதைப் பேணிடவே பொங்கிடும் இன்சுகமே!
புவனம் தனில் உறையும் பூதலத்து மக்களெல்லாம்
போற்றிடவே பொழியும் புதுமை எங்கணுமே!

Leave a Reply