வண்ணத்துப் பூச்சிக்கும் வாலாட்டிக் குருவிக்கும்
சொத்து சுகம் என்பதேது!-அதன்
சுறுசுறுப்பை நீயும் பாரு!
கானப்புறாவுக்கும் காட்டுக்குயிலுக்கும்
கல்விச்சாலை என்பதேது!-அந்த
கானம் சொல்லித் தந்ததாரு!
காக்கைக்குருவியும் காடை கௌதாரியும்
கட்டி வாழுகின்ற கூடு!-அதில்
காணும் திறமையை நாடு!
பூவண்ணச் சிட்டுக்கள் பொன்வண்டு மொட்டுக்கள்
பூமிக்குச் சேர்த்திடும் வண்ணம்!-அதைப்
போற்றிடவே மனம் எண்ணும்!
ஆடும் மயிலுக்கும் அன்றில் பறவைக்கும்
நட்டுவாங்கம் சொன்னதாரு!-அதன்
நாட்டியமோ வெகு ஜோரு!
மின்மினிப் பூச்சியும் மீன்கொத்திப் பறவையும்
மேவிடும் பூமிக்கோர் அழகு!-அதன்
மேன்மையை நீயுமே பழகு!
தச்சன் குருவிக்கும் சாதகப் பட்சிக்கும்
வித்தை கற்றுத் தந்ததாரு!-அதன்
வெற்றியை நீயுமே பாடு!

Leave a Reply