உயர்வான மரங்களையே
உருவாக்கும் விதைகளையே
ஊன்றிடவே மண்ணுக்குள்
தோன்றிடுமே அதிசயமே!
விதையதுவும் செடியாகி
செடியதுவும் மரமாகி
வியத்திடும் நன்மைகளைப்
பயத்திடுமே நமக்கே!
பூமலர்ந்து காயாகி
காய்பழுத்துக் கனியாகி
பூமியில் உயிர்களெல்லாம்
புசித்திட உணவாகும்!
முதிர்இலைச் சருகுகளும்
முறிந்திடும் கிளைகளுமே
மண்மீது வீழ்ந்திடவே
மண்ணுயிர்க்கு உணவாகும்!
வெய்யோனின் ஒளிக்கதிரை
விரிதழையால் தான்தழுவி
வியனுலகின் உயிர்களையே
வேலியாய்க் காத்திடுமே!
நஞ்சையே உணவாக்கி
நாம்வாழ வளிஅருளி
விஞ்சிநிற்கும் கொடையதனால்
விருட்சம் ஓர் உயர் இனமே!

Leave a Reply