விசும்பின் துளியது மண்ணிடை வீழ்ந்தால்
வேண்டுவதெல்லாம் நலமாகும்!
வினைப்பயன் அதுவே மறைந்திட ஆங்கே
வெற்றியே நமது வரவாகும்!
வெள்ளை உள்ளம்! பிள்ளை குணமே!
விரும்பிடும் யாவையும் நமதாகும்!
மாக்கடல் அதனின் மகிமையும் குன்றும்
மழையதும் மண்ணில் தவறிடவே!
மானம் தானம் தவமது யாவும்
மறைந்திடும் ஆங்கே மழை இலையேல்!
மக்கள் மாக்கள் மகிழ்ந்திட உலகில்
மழையதுவே என்றும் பெருந்துணையாம்!
வானது வழங்கும் வரம் அதுவாலே
வையம் இங்கே தழைத்திடுதே!
வரமதை வழங்கும் தகைமையினாலே
மழையதுவே என்றும் அமிழ்தமதே!
வாழும் உயிர்கள் வாழ்த்திட மண்ணில்
வழங்கிடும் உயிர்நீர் மழையதுவே!

Leave a Reply