வரைமுகடோ நெடிதுயர்ந்து வானகத்தைத் தழுவும்!
வான்மகளோ நாணிடவே மேல்சேலை நழுவும்!
மேகமெனும் வாகனத்தில் ஊர்வலமே நடக்கும்!
மேனியதும் குளிர்ந்திடவே தேன்மழையே வடிக்கும்!
மனம்குளிர வானகமே மாமழையே பொழியும்!
மண்ணகமே மனம்மகிழ பொன்னதுவே விளையும்!
வையகத்து உயிரனைத்தும் வானகத்தை வணங்கும்!
வான்மழையின் பரிசமதால் பூமியதே சிணுங்கும்!
தாவரமே வரமதுவாய் வரைகளிலே செழிக்கும்!
தரணியிதே அதுவழங்கும் வளமதுவால் கொழிக்கும்!
தன்னலமே பேணாத தகைமையதால் மிளிரும்!
தான்வழங்கும் கொடையதுவால் மன்பதையில் ஒளிரும்!
மலைகளதே மன்பதைக்கு அணிகலனாய் விளங்கும்!
மழைவளமும் மண்வளமும் வாரியென்றும் வழங்கும்!
மக்களோடு மாக்களையும் மாநிலத்தே காக்கும்!
மனதினிலே நேயம்மிக மேன்மையதே பூக்கும்!
(குறிஞ்சித் திணை பற்றிய பாடல்)

Leave a Reply