வயலில் செந்நெல் முற்றி தலை சாய்த்து ஆடுதே!
வாகையும் பூவரசும் கரையில் பூத்து ஆடுதே!
வண்டு பூவில் தேனதனை ருசித்து சுவைக்குதே!
வரப்பில் நண்டு வளையின் சேற்றை ஏற்றி அடைக்குதே!
கிணற்று நீரும் கரையில் மோதி அலை அடிக்குதே!
கெண்டை கெழுத்தி உவகையதால் துள்ளிக் குதிக்குதே!
கிளிகளதும் சிறகடித்துப் பாடிப் பறக்குதே!
கிழக்கு திசையினிலே சூரியனும் மெள்ள உதிக்குதே!
உழவரது உள்ளமெலாம் துள்ளிக் களிக்குதே!
ஓடையிலே ஓடும் நீரும் சல சலக்குதே!
பனிமலரும் இதழ்விரித்து மணம் பரப்புதே!
பாடும் தென்றலதும் உளம்கவரும் மணம் சுமக்குதே!
குயிலதுவும் சோலையிலே இசையைப் பழகுதே!
கொண்டை குருவியுமே பெடையுடனே பாடி உருகுதே!
மயிலதுவும் தோகையதை விரித்து ஆடுதே!
மனிதர் மனமதுவும் மகிழ்ச்சியினால் கூத்து ஆடுதே!
(மருதத் திணை-பற்றிய பாடல்)

Leave a Reply