மண்ணுக்கு அழகு செய்யும் மரங்களே நண்பராக

கண்ணின் கருவிழிபோல் காத்திடுவோம் எந்நாளும்!

விண்முட்ட உயர்ந்திலங்கி விரிகடலாய்ப் பரந்து எங்கும்

வியனுலகைக் காத்து நிற்கும் விந்தை மிகு வனங்களன்றோ!

தன்னலத்தைப் பேணாது தாரணியின் உயிர்காக்கும்

தன்மையினால் உயர்திணையாம் தருக்களே பூமியிலே!

உண்ணும் உணவாகி உயிர் காக்கும் நீராகி

உடையும் தானாகி உறைவிடமும் அருளி நிற்கும்!

மண்ணகத்து உயிரனைத்தும் மாதாவாய்ப் போற்றி நிற்கும்

மரங்கள் நிறைந்திலங்கும் வனங்களவை வாழ்விடத்தே!

எண்ணமதை இனிதாக்கி இதயத்தில் வலுவூட்டி

திண்ணமுறச் செய்துநிற்கும் திரவியமாம் நல் வனமே!

மண்காத்து மலைகாத்து மலையிடை நல்நீர்காத்து

தண் காற்றைத் தான் தந்து தக்கோரைத் தாங்கி நிற்கும்

பண்ணாகி மூங்கிலிடைப் பரவசத்தைத் தான் சேர்த்து

பாரோர் மனம்மகிழப் பாடிநிற்கும் இசைஅமுதாய்!

வெண்கொற்றக் குடையிருந்து வீசுநல் சாமரமாய்

வெய்யில்தணித்து மண்ணில் விளைத்திடும் இன்சுகமே!

நன்செய் விளைந்து நாட்டில் நலமே நிறைந்திருக்க

நன்மை பயத்து நிற்கும் நயன்மிகு வனங்களன்றோ!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *