ஆற்றிலே வெள்ளம் கண்டு
ஆனந்தம் கொண்டிருப்பார்!
ஆதவன் துணையால் மண்ணில்
அதிசயம் விளைத்திருப்பார்!
அவனியின்உயிர்கட்கெல்லாம்
அறுசுவை உணவைத்தந்தே
ஆண்டவன் வடிவாய் மண்ணை
அகழ்பவர் உழவர்தாமே!
ஏர்முனை நிலமே ஏந்த
ஏற்றமும் நீரைச் சேந்த!
மாடுகள் வயலில் உழவே
மண்மாதா பொன்கொழிப்பாள்!
வகையாக நெல் விளைப்பார்!
வாஞ்சை மிகு உழவர்தாமே!
வையத்து உயிர்கள் தம்மை
வாடாமல் காத்திருப்பார்!
நாற்றிலே பருவம் கண்டு
சேற்றிலே அதனை நட்டு
ஆற்றிலே ஓடும் நீரால்
அமுதான நெல் விளைப்பார்!
தேடாத செல்வம் எல்லாம்
தேடிவந்த போதும் உண்ண
தேன்கனியாய் உணவளிப்பார்!
தேசத்தில் உழவர்தாமே!
மாறாது மாரி பெய்ய
மதகெல்லாம் நீர் பெருக
சோராத தங்கள் மேனி
போராடி நெல்விளைப்பார்!
ஏரதன் துணையால் இங்கே
ஏற்றமே கண்டிருப்பார்!
போர்முனை வீரரோடு
புலவரும் பின்தொடர்வார்!
உழுதிடும் மாந்தர் யாரும்
உலகிலே உயர்ந்தோர் அன்றோ!
உணவதை ஆக்கும் அந்த
உழைப்பாளி தெய்வமன்றோ!
மண்ணிலே பொன்விளைக்கும்
மாயங்கள் செய்வதாலே
மாநிலம் போற்ற நிற்கும்
மானமிகு உழவர்தாமே!

Leave a Reply