மழைத்துளி மண்ணிலே வீழ்ந்திட-அதன்

மாட்சிமை எங்கும் பசுமையே!

கலை நோக்குட னே அதைப் பார்த்திட-நனி

காவியமே கண்ணில் தோன்றிடும்!

பூத்து சிரிக்கும் மலர்களும்-அடை

காத்திடும் வண்ணப் பறவையும்

சேர்த்திடுமே ஒரு இன்பமே!-அதன்

நேர்த்தியை என்னென்று சொல்லிட!

பூமியெங்கும் பச்சைப் பட்டுடை!-ஒரு

புத்தொளி வீசிப் புலர்ந்திடும்!

ஆறு குளங்கள் நிறைந்திட -அது

ஆர்த்திடும் எங்கும் வளமையே!

கோலமிகு வண்ணப் பூச்சிகள்!-எக்

காளமிட்டே கலி கூறிடும்!

காலமது துணை வந்திட-இந்த

ஞாலமெங்கும் என்றும் நன்மையே!

நீண்டு உயர்ந்த மரங்களும்-அவை

நிறைந்திருக்கும் நல் வனங்களும்

பூண்டிடும் பூமிக்கு ஓர் அணி-அதைப்

போற்றி வளர்த்திடுவோம் இனி!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *