கொடுவெயில் தனைத்தணிக்கும் குளிர்தரு தருக்களையே
குவலயத்தில் காத்தல் கடமை அன்றோ!
நடும்மரம் காக்காமல் நாட்களைப் போக்கிடுதல்
நானிலத்தில் அதுவே மடமை அன்றோ!
காய்கனி பலன்தந்து உயிர்களைக் காத்திலங்கும்
கருணை நிறைந்த மரம் தாயே அன்றோ!
வேய்ங்குழல் இசையாக வேதங்கள் போற்றிநிற்கும்
வியத்தகு மரம் நமது தந்தை அன்றோ!
மண்வளம் தான்காத்து மருந்தாய் நோய்நீக்கும்
மரங்கள் நமது உயிர் நண்பர் அன்றோ!
மழையதை உருவாக்கி உயிர்நீர் தான்வழங்கும்
மாண்பமை மரம் நமது அன்பர் அன்றோ!
உயிர்வளி தான்வழங்கி விடக்காற்றை உட்கொள்ளும்
உயர்வான மரம் நமது காவலன் அன்றோ!
உள்ளம்தனைக் கிளர்ந்து உணர்வுடன் கலந்தேகி
உவந்திட கவிதை தரும் பாவலன் அன்றோ!

Leave a Reply