மண்ணுயிர் காக்கும் மழையதன் அருமை

மாந்தரும் அறியவில்லை!-நம்

கண்ணெனப் போற்றும் நீரதன் பெருமை

கற்றவர் தெரியவில்லை!

மழையதும் வீழ்ந்து பூமியின் மேலே

நிறைந்தே இருந்தாலும்-அது

பொழிகின்ற இடமே புரிந்திடும் நலமே

பூமியில் உயிர்களுக்கே!

உயிர்நீர் அதுவாய் உயிர்களைக் காத்து

உதவிகள் புரிந்தாலும்-அதன்

உன்னதம் அறியா மானிடர் அவரே

உண்மை உணரவில்லை!

அமிழ்தென விளங்கி அவனியைக் காத்து

அணியெனத் திகழ்ந்தாலும்-நீர்

அரிதென ஆக அதன் அரும் பெருமை

அகிலம் உணர்ந்திடுமே!

(நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *