கண்கோடி வேண்டுமடி செல்லக்கிளியே!
காவிரியை ரசித்திடவே செல்லக்கிளியே!
காவிரித்த இருகரையும் செல்லக்கிளியே!
கரை புரண்டு ஓடுதடி செல்லக்கிளியே!
மண்ணுயிரைப் புறந்தருளும்
மன்னுபுகழ்க் காவிரியே!
மங்காத வாழ்வருளும்
மாண்புடைய தாயவளே!
மேற்கு மலைத் தொடரின்
மேனி எழில் மேட்டினிலே
மேகம் மழை பொழிய
மேதினியில் தவழ்ந்திடுவாள்!
தான் நடந்த பாதையெல்லாம்
தன்னருள் செய்திடுவாள்!
வான்மழையை முகந்து வந்து
வளமதைத் திறம் புரிவாள்!
பூதலத்து மக்களுக்குப்
புதுவாழ்வு தர வேண்டி
பொங்கி வந்து வளம் கொழிப்பாள்!
பொன்மகளே காவேரி!
கண்கோடி வேண்டுமடி செல்லக்கிளியே!
காவிரியை ரசித்திடவே செல்லக்கிளியே!
காவிரித்த இருகரையும் செல்லக்கிளியே!
கரை புரண்டு ஓடுதடி செல்லக்கிளியே!

Leave a Reply