பொங்கிவரும் கடல் அலையாய்

பங்கயத்தின் இதழ் அழகாய்

தெங்கதனின் இனிமையதாய்

தென்றலதன் குளிர்மையதாய்

எங்கும் நிறை இயற்கை உனைக் கண்டேன்! -என்

இதயமதில் உனை நினைந்து நின்றேன்!

நினைந்து நின்றேன்!

வானுயர்ந்த வரைகளதாய்

வண்டுலவும் சோலையதாய்

வண்டமிழின் செழுமையதாய்

வண்ணமலர் நறுமணமாய்

வையமெங்கும் இயற்கை உனைக் கண்டேன்! -உன்

வளமையதில் எனைமறந்து நின்றேன்!

மறந்து நின்றேன்!

மாங்குயிலின் தேனிசையாய்

மங்கையவர் தளிர்நடையாய்

மேகமதன் மழையதுவாய்

மென்காற்று தரும்சுகமாய்

மேதினியில் இயற்கை உனைக் கண்டேன்! -உன்

மேன்மையதில் உளம் கனிந்து நின்றேன்!

கனிந்து நின்றேன்!

ஓங்கிநிற்கும் மரநிழலாய்

ஓடிவரும் நதிஅழகாய்

ஓங்கார இசைஅமுதாய்

ஓலமிடும் பெருங்காற்றாய்

உலகமெங்கும் உன் எழிலைக் கண்டேன்-அந்த

உணர்வினிலே ஊன்கலந்து நின்றேன்!

கலந்து நின்றேன்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *