மேகம் பொழியும் மழைத்துளி போலெங்கள்

மேனி வியர்வை பொழிந்திந்த மண்ணில்-முப்

போகம் விளைந்திட அல்லும் பகலுமே

கால் கைகள் தேய உழைத்திடுவோம்!

வயல் சேற்றினிலே உளைந் தாற்றியதால்

உள்ளங் காலெங்கும் சேற்றுப்புண் ஆகிடுமே!

ஓடி உழைத்திட நாள் முழுதும்

வீடு வந்ததுமே கண்கள் சொக்கிடுமே!

மண்ணிலே நீர் பாய்ச்சி உழுதபின்னே-அதை

மட்டம் செய்யப் பரம் படித்திடுவோம்!

மண்ணை வெட்டி வரப்பெடுத்த பின்னே-அதன்

மடையைத் திறக்க நீர்ப் பாய்ந்திடுமே!

நெற்பயிரை மண்ணில் நட்டு நீர் பாய்ச்சிட

நெஞ்சில் நிறைந்திடும் நிம்மதியே!

நட்டபயிரை நாம் கண்ணெனக் காத்திட

நாளும் வளர்ந்தது தந்திடும் நெல்மணி!

நெல்லை அறுவடை செய்து குவித்திட

நேர்ந்திடுமே ஒரு இன்ப சுகம்!

தொல்லைகள் போயின; போயின துன்பங்கள்!

தொழு திடுவோம் இந்த மண்மகளை!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *