மேகம் பொழியும் மழைத்துளி போலெங்கள்

மேனி வியர்வை பொழிந்திந்த மண்ணில்-முப்

போகம் விளைந்திட அல்லும் பகலுமே

கால் கைகள் தேய உழைத்திடுவோம்!

வயல் சேற்றினிலே உளைந்தாற்றியதால்

உள்ளங்காலெங்கும் சேற்றுப்புண் ஆகிடுமே!

ஓடி உழைத்திட நாள் முழுதும்

வீடு வந்ததுமே கண்கள் சொக்கிடுமே!

மண்ணிலே நீர் பாய்ச்சி உழுதபின்னே-அதை

மட்டம் செய்யப் பரம்படித்திடுவோம்!

மண்ணை வெட்டி வரப்பெடுத்த பின்னே-அதன்

மடையைத் திறக்க நீர்ப்பாய்ந்திடுமே!

நெற்பயிரை மண்ணில் நட்டு நீர் பாய்ச்சிட

நெஞ்சில் நிறைந்திடும் நிம்மதியே!

நட்டபயிரை நாம் கண்ணெனக் காத்திட

நாளும் வளர்ந்தது தந்திடும் நெல்மணி!

நெல்லை அறுவடை செய்து குவித்திட

நேர்ந்திடுமே ஒரு இன்ப சுகம்!

தொல்லைகள் போயின; போயின துன்பங்கள்!

தொழுதிடுவோம் இந்த மண்மகளை!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *