தவழும் தென்றல் காற்று!-அது

தருமே ராகம் கோடி!

ராகம் சங்கீதம் இசையாக-பூங்

கவிதை உண்டாகுமே-பைந்

தமிழைக் கொண்டாடுமே!

அசையும் கொடியும் ஆடும் மரமும்

அலையும் கடலும் வளையும் மூங்கில்

எல்லாம் இன்பப் பண்பாடுதே!-புது

இன்பம் அங்கே உண்டாகுதே!

ஆற்றுநீரின் சலசலப்பை

ஆழ்ந்து நோக்க இசைநயமே!

ஆர்ப்பரிக்கும் அருவி நீரைக்

கூர்ந்து நோக்க எழில் இசையே!

சேற்றில் திரியும் பறவை குரலே

சேர்த்து நிற்கும் ஏழிசையே!

செம்மண் மீது மழை பொழிய

சிந்தும் அங்கே இசை மழையே!

இயக்கம் எதுவும் இசையில்லாமல்

இயங்க தனித்தே இயலாதே!

இயக்கம் அதுவே இசையைத் தரவே

இணைந்து வாழ்தல் இனிதாமே!

இசையைத் தந்து இயங்கி நிற்கும்

இந்த உலகம் நமதாமே!

இசையில் மயங்கி இன்பம் நுகர

இம்மை வாழ்வு நலமாமே!

தவழும் தென்றல் காற்று!-அது

தருமே ராகம் கோடி!

ராகம் சங்கீதம் இசையாக-பூங்

கவிதை உண்டாகுமே-பைந்

தமிழைக் கொண்டாடுமே!

(சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *