சுற்றும் பூமி சுற்றுவது அதனின்
சூத்திரம் யார் அறிவார்!
சூத்திரம் அதையே யாத்தவன் அவனின்
சூட்சுமம் யார் அறிவார்!
சூத்திரம் அதுவே பிறழாமல்
சூட்சுமம் அதுவும் விலகாமல்
சாத்திரப்படி அது நிகழ்ந்து வரும்
நேர்த்தியை நாமே அறிவோமே!
காலையில் எழுவதும் மாலையில் மறைவதும்
கதிரவன் அவனின் செயலாமோ!
வானில் உலவிடும் முழுமதி அதனின்
ஒளியும் ஞாயிறு அதனாலே!
ஞாயிறு போற்றிட ஞாலம் வளம்பெறும்!
நாமே அதையே அறிவோமே!
வாழ்ந்திடும் பூமியின் வளமதைக் குறைத்திடும்
வக்கிரம் நாம்அதை அறியோமே!
அறியா மாந்தர் ஆற்றிடும் தவறை
அறிவால் நாமும் தெளிவோமே!
அகிலம் வளம்பெற அனைவரும் நலமுற
அழிந்திடும் பூமியைக் காப்போமே!
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்
கயமை அதையே தவிர்ப்போமே!
மண்ணே எல்லாம்; மண்உயிர்க் கெல்லாம்
மகிமை அதனை மறவோமே!
விண்ணும் மண்ணும் காத்திட உலகில்
விளங்கிடும் என்றும் மெய்ச்சுகமே!
பெண்ணாய்ப் பூமியைப் போற்றிட உலகில்
பெருமைகள் நம்மைச் சேர்ந்திடுமே!

Leave a Reply